மனிதர்கள் விண்வெளியையும் பிரபஞ்சத்தையும் அறிந்த அளவிற்கு, அறியாத ஆழங்களும் அதிசயங்களும் மிக்க கடலை தெரிந்திருக்கவில்லை என்கிறது அறிவியல்.
கடலில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செல்லலாம்.
நிலம் காணும் இயற்கை அனர்த்தங்களுக்கு ஒப்பான பல விடயங்கள் கடலில் நடக்கின்றன. சமீபத்தில் தாய்வானுக்கு அருகாமையில் உள்ள கடற் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
இக் கடலடிப் பூகம்பம் பல ஆழ் கடல் உயிரினங்களைப் பலத்த பாதிப்பிற்கு உள்ளாக்கியிருந்தது. கடலுக்கு வெளியே வந்த இராட்சத மீன் ஒன்று அதற்கான ஆதாரமாகமாகத் தற்போது கிடைத்திருக்கிறது.
தாய்வான் கடற் கரையில் , 16 அடி நீளமுள்ள இனம் காணப்படாத இராட்சத மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

தாய்வான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள , கங்கால் என்னும் கிராமத்தின் கடல் கரையில் இது கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கிய இந்த அபூர்வமான மீன் எவ்வகையான ஆராய்ச்சிக்கும் உட்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
காரணம் கரையொதுங்கிய இந்த மீனை அப்பிரதேச மீனவர்கள் உடனடியாக வெட்டித் துண்டாடி விற்று விட்டார்கள். அறிவியல் தேடலை விட அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் அன்றாட வருமானத்தை இழக்க அந்த மீனவர்கள் தயாராகவில்லை.