ஆடி என்பது ஒரு தேவ மங்கையின் கதை என்கிறது புராணங்கள். கிரகங்களின் திருவிளையாடலால் பார்வதிதேவி சிவபெருமானை விட்டு விலகி தவம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதை அறிந்து கொண்ட ஆடி என்னும் தேவகுல மங்கை சிவபெருமானின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு பாம்பு வடிவம் எடுத்து கைலாயம் உள்ளே நுளைந்து பார்வதிதேவியாக உருமாறி சிவபெருமான் அருகே சென்றார். தன் அருகில் வந்து இருப்பது பார்வதி அல்ல என்பதை அறிந்து கொண்ட ஈசன் தன் அருகில் உள்ள ஆடியை சங்காரம் செய்ய தன் சூலாயுதத்தை எடுத்தார். அப்போது சூலாயுதத்தில் இருந்து தீப்பொறி வந்தது. அது ஆடியை புனிதமடையச் செய்தது. பின் ஆடி ஈசனை வணங்கி தங்களின் அன்பு ஒரு நிமிடமாவது என் மீது படவேண்டும் என்பதற்காகத் தான் நான் இவ்வாறு செய்தேன் என்னை மனிதருள வேண்டினாள் ஆடி. ஆனால் சிவபெருமான் என் பார்வதி என் அருகில் இல்லாத போது அவள் போல் நீ வடிவம் கொண்டு வந்தது தவறு என்று கூறி நீ பூலோகத்தில் கசப்பு சுவையுடைய மரமாக இருப்பாய் என சாபம் அளித்தார். அதற்கு ஆடி ஈசனிடம் தன் பிழை பொறுத்து சாபவிமேசனம் கேட்டாள். அதற்கு ஈசன் "நீ கசப்பு சுவையுடைய மரமாக இருந்தாலும் ஆதிசக்தியின் அருள் உனக்கு கிடைக்கும், ஆதிசக்தியை வணங்கும் போது உன்னையும் வழிபாட்டுப் பொருளாக பயன்படுத்துவர், பூலோகத்தில் உன் பெயரிலேயே ஆடி என்னும் ஒரு மாதம் உருவாக்கி ஆதிசக்தியை வணங்கும் மாதமாக விளங்கும்" என்றார். ஈசனின் சாபத்தால் ஆடி என்னும் மங்கை பூலோகத்தில் வேப்பமரமாக அவதரித்து மக்களுக்கு நன்மை செய்கிறாள். ஈசனின் சாபமே ஆடிக்கு வரமாக மாறியது. தெய்வ அம்சம் கொண்ட வேம்பு ஆதிசக்தியின் அம்சமாகக் கருதப் படுகிறது.
ஓம் சக்தி பராசக்தி